உலகத்தொல்காப்பிய மன்றம்

tzf;fk;!

தமிழில் கிடைத்துள்ள முதல் இலக்கண நூலான தொல்காப்பியத்தின் சிறப்பினைத் தமிழ் மக்கள் அனைவரும் உணரும்வகையில் செயலாற்றுவதை நோக்கமாகக் கொண்டு உலகத் தொல்காப்பிய மன்றம் தோற்றம்பெற்றுள்ளது. பிரான்சு நாட்டின் தலைநகராம் பாரிசில் 27.09.2015 ஆம் நாளில் தமிழறிஞர்கள் ஒன்றுகூடி இம்மன்றத்தைத் தொடங்கினர். 04.06.2016 இல் கனடாவில் உலகத் தொல்காப்பிய மன்றத்தின் கிளை தொடங்கப்பட்டது. தமிழகத்தில் புதுச்சேரி, கோவை, திருச்சிராப்பள்ளி, திருவண்ணாமலை, குளித்தலை உள்ளிட்ட பல ஊர்களில் இந்த மன்றம் சிறப்பாகச் செயல்படுகின்றது.


உலகத் தொல்காப்பிய மன்றத்தின் மலேசியக் கிளை 23.12.2017 இல் சிலாங்கூர் மாநிலம் பந்திங் நகரிலும், சப்பான் நாட்டின் கிளை 03.02.2018 இல் தலைநகர் தோக்கியோவிலும், அமெரிக்க நாட்டில் நியூ செர்சி மாநிலத்தின் கிளை 16.06.2018 இல் பிசுகாட்டவே நகரிலும், பிரித்தானிய நாட்டின் கிளை 30.06.2018 இல் இலண்டன் நகரிலும், ஆத்திரேலிய நாட்டில் கிளை 20.04.2019 இல் சிட்னி நகரிலும் தொடங்கப்பட்டது. உலகின் பல பகுதிகளில் இம்மன்றத்தின் கிளைகளைத் தொடங்குவதற்கும் எண்ணியுள்ளோம்.

தமிழ் மொழியின் சிறப்பினையும், தமிழர்களின் பண்பாட்டுச் சிறப்பினையும் சற்றொப்ப மூவாயிரம் ஆண்டுகளாக அரணிட்டுக் காத்துநிற்கும் தொல்காப்பியத்தைப் பரப்புவதற்கு முன்வருமாறு உலகத் தமிழர்களை அன்புடன் வேண்டுகின்றோம்.

உலகிலேயே முதன்முதலாக ஐம்பொன்னால் 270 கிலோ எடையில் தொல்காப்பியர் திருவுருவச் சிலையினை உலகத் தொல்காப்பிய மன்றம், கோவைத் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம், பேரூராதீனத் தமிழ்க் கல்லூரி ஆகிய மூன்றும் இணைந்து உருவாக்கி உலகிற்கு அளித்தது. இச்சிலை பேரூர் சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் தமிழ்க் கல்லூரி வளாகத்தில் தொல்காப்பியர் ஆண்டு 2732, திருவள்ளுவராண்டு 2053, கி.பி. 13-4-2022, பங்குனித் திங்கள் 30 ஆம் நாளன்று திறக்கப்பட்டது.

தொடர்புக்கு:
மு. இளங்கோவன் muetamil@gmail.com
நா. க. நிதி kanithi@tholkappiyam.org

காணொளி

நிகழ்வுகள்