உலகத்தொல்காப்பிய மன்றம்

1. கிளவியாக்கம்

உயர்திணை என்மனார் மக்கட் சுட்டே 
அஃறிணை என்மனார் அவரல பிறவே 
ஆயிரு திணையின் இசைக்குமன சொல்லே.

ஆடூஉ அறிசொல் மகடூஉ அறிசொல் 
பல்லோர் அறியும் சொல்லொடு சிவணி 
அம்முப் பாற்சொல் உயர்திணை யவ்வே.

ஒன்றறி சொல்லே பலஅறி சொல்லென்று 
ஆயிரு பாற்சொல் அஃறிணை யவ்வே.

பெண்மை சுட்டிய உயர்திணை மருங்கின் 
ஆண்மை திரிந்த பெயர்நிலைக் கிளவியும் 
தெய்வம் சுட்டிய பெயர்நிலைக் கிளவியும் 
இவ்வென அறியும் அந்தம் தமக்கு இலவே 
உயர்திணை மருங்கின் பால்பிரிந் திசைக்கும்.

னஃகான் ஒற்றே ஆடூஉ அறிசொல்.

ளஃகான் ஒற்றே மகடூஉ அறிசொல்.

ரஃகான் ஒற்றும் பகர இறுதியும் 
மாரைக் கிளவி உளப்பட மூன்றும் 
நேரத் தோன்றும் பலர்அறி சொல்லே.

ஒன்றறி கிளவி தறட ஊர்ந்த 
குன்றியலுகரத்து இறுதி யாகும்.

அ ஆ வ என வரூஉம் இறுதி 
அப்பால் மூன்றே பலர்அறி சொல்லே.

இருதிணை மருங்கின் ஐம்பால் அறிய 
ஈற்றில் நின்றிசைக்கும் பதினோர் எழுத்தும் 
தோற்றந் தாமே வினையொடு வருமே.

10 

வினையின் தோன்றும் பால்அறி கிளவியும் 
பெயரின் தோன்றும் பால்அறி கிளவியும் 
மயங்கல் கூடா தம்மர பினவே.

11 

ஆண்மை திரிந்த பெயர்நிலைக் கிளவி 
ஆண்மை அறிசொற்கு ஆகிடன் இன்றே.

12 

செப்பும் வினாவும் வழாஅல் ஓம்பல்.

13 

வினாவும் செப்பே வினாஎதிர் வரினே.

14 

செப்பே வழீஇயினும் வரைநிலை யின்றே 
அப்பொருள் புணர்ந்த கிளவி யான.

15 

செப்பினும் வினாவினும் சினைமுதல் கிளவிக்கு 
அப்பொருள் ஆகும் உறழ்துணைப் பொருளே.

16 

தகுதியும் வழக்கும் தழீஇயின ஒழுகும் 
பகுதிக் கிளவி வரைநிலை இலவே.

17 

இனச்சுட்டு இல்லாப் பண்புகொள் பெயர்க்கொடை 
வழக்காறு அல்ல செய்யுள் ஆறே.

18 

இயற்கைப் பொருளை இற்றெனக் கிளத்தல்.

19 

செயற்கைப் பொருளை ஆக்கமொடு கூறல்.

20 

ஆக்கந் தானே காரணம் முதற்றே.

21 

ஆக்கக் கிளவி காரணம் இன்றியும் 
போக்கின்று என்ப வழக்கி னுள்ளே.

22 

பால்மயக் குற்ற ஐயக்கிளவி 
தான்அறி பொருள்வயின் பன்மை கூறல்.

23 

உருபென மொழியினும் அஃறிணைப் பிரிப்பினும் 
இருவீற்றும் உரித்தே சுட்டும் காலை.

24 

தன்மை சுட்டலும் உரித்தென மொழிப 
அன்மைக் கிளவி வேறிடத் தான.

25 

அடைசினை முதல்என முறைமூன்றும் மயங்காமை 
நடைபெற் றியலும் வண்ணச் சினைச்சொல்.

26 

ஒருவரைக் கூறும் பன்மைக் கிளவியும் 
ஒன்றனைக் கூறும் பன்மைக் கிளவியும் 
வழக்கி னாகிய உயர்சொல் கிளவி 
இலக்கண மருங்கின் சொல்லாறு அல்ல.

27 

செலவினும் வரவினும் தரவினும் கொடையினும் 
நிலைபெறத் தோன்றும் அந்நாற் சொல்லும் 
தன்மை முன்னிலை படர்க்கை என்னும் 
அம்மூ விடத்தும் உரிய என்ப.

28 

அவற்றுள், 
தருசொல் வருசொல் ஆயிரு கிளவியும் 
தன்மை முன்னிலை ஆயீர் இடத்த.

29 

ஏனை இரண்டும் ஏனை இடத்த.

30 

யாது எவன் என்னும் ஆயிரு கிளவியும் 
அறியாப் பொருள்வயின் செறியத் தோன்றும்.

31 

அவற்றுள், 
யாதுஎன வரூஉம் வினாவின் கிளவி 
அறிந்த பொருள்வயின் ஐயம் தீர்தற்குத் 
தெரிந்த கிளவி யாதலும் உரித்தே.

32 

இனைத்தென அறிந்த சினைமுதல் கிளவிக்கு 
வினைப்படு தொகுதியின் உம்மை வேண்டும்.

33 

மன்னாப் பொருளும் அன்ன இயற்றே.

34 

எப்பொருள் ஆயினும் அல்லது இல்லெனின் 
அப்பொருள் அல்லாப் பிறிதுபொருள் கூறல்.

35 

அப்பொருள் கூறின் சுட்டிக் கூறல்.

36 

பொருளொடு புணராச் சுட்டுப்பெய ராயினும் 
பொருள்வேறு படாஅது ஒன்று ஆகும்மே.

37 

இயற்பெயர்க் கிளவியும் சுட்டுப்பெயர்க் கிளவியும் 
வினைக்கொருங் கியலும் காலம் தோன்றின் 
சுட்டுப்பெயர்க் கிளவி முற்படக் கிளவார் 
இயற்பெயர் வழிய என்மனார் புலவர்.

38 

முற்படக் கிளத்தல் செய்யுளுள் உரித்தே.

39 

சுட்டுமுதல் ஆகிய காரணக் கிளவியும் 
சுட்டுப்பெயர் இயற்கையின் செறியத் தோன்றும்.

40 

சிறப்பின் ஆகிய பெயர்நிலைக் கிளவிக்கும் 
இயற்பெயர்க் கிளவி முற்படக் கிளவார்.

41 

ஒருபொருள் குறித்த வேறுபெயர்க் கிளவி 
தொழில்வேறு கிளப்பின் ஒன்றிடன் இலவே.

42 

தன்மைச் சொல்லே அஃறிணைக் கிளவியென்று 
எண்ணுவழி மருங்கின் விரவுதல் வரையார்.

43 

ஒருமை எண்ணின் பொதுப்பிரி பாற்சொல் 
ஒருமைக் கல்லது எண்ணுமுறை நில்லாது.

44 

வியங்கோள் எண்ணுப் பெயர் திணைவிரவு வரையார்.

45 

வேறுவினைப் பொதுச்சொல் ஒருவினை கிளவார்.

46 

எண்ணுங் காலும் அதுஅதன் மரபே.

47 

இரட்டைக் கிளவி இரட்டிற்பிரிந் திசையா.

48 

ஒரு பெயர்ப் பொதுச்சொல் உள்பொருள் ஒழியத் 
தெரிபுவேறு கிளத்தல் தலைமையும் பன்மையும் 
உயர்திணை மருங்கினும் அஃறிணை மருங்கினும்.

49 

பெயரினும் தொழிலினும் பிரிபவை எல்லாம் 
மயங்கல் கூடா வழக்கு வழிப்பட்டன.

50 

பலவயி னானும் எண்ணுத்திணை விரவுப்பெயர் 
அஃறிணை முடிபின செய்யு ளுள்ளே.

51 

வினைவேறு படூஉம் பலபொருள் ஒருசொல் 
வினைவேறு படாஅப் பலபொருள் ஒருசொல்லென்று 
ஆயிரு வகைய பலபொருள் ஒருசொல்.

52 

அவற்றுள், 
வினைவேறு படூஉம் பலபொருள் ஒருசொல் 
வேறுபடு வினையினும் இனத்தினும் சார்பினும் 
தேறத் தோன்றும் பொருள்தெரி நிலையே.

53 

ஒன்றுவினை மருங்கின் ஒன்றித் தோன்றும் 
வினைவேறு படாஅப் பலபொருள் ஒருசொல் 
நினையும் காலை கிளந்தாங்கு இயலும்.

54 

குறித்தோன் கூற்றம் தெரித்துமொழி கிளவி.

55 

குடிமை ஆண்மை இளமை மூப்பே 
அடிமை வன்மை விருந்தே குழுவே 
பெண்மை அரசே மகவே குழவி 
தன்மை திரிபெயர் உறுப்பின் கிளவி 
காதல் சிறப்பே செறற்சொல் விறற்சொல் என்று 
ஆவறு மூன்றும் உளப்படத் தொகைஇ 
அன்ன பிறவும் அவற்றொடு சிவணி 
முன்னத்தின் உணருங் கிளவி எல்லாம் 
உயர்திணை மருங்கின் நிலையின ஆயினும் 
அஃறிணை மருங்கின் கிளந்தாங்கு இயலும்.

56 

காலம் உலகம் உயிரே உடம்பே 
பால்வரை தெய்வம் வினையே பூதம் 
ஞாயிறு திங்கள் சொல்என வரூஉம் 
ஆயீர் ஐந்தொடு பிறவும் அன்ன 
ஆவயின் வரூஉம் கிளவி எல்லாம் 
பால்பிரிந்து இசையா உயர்திணை மேன.

57 

நின்றாங்கு இசைத்தல் இவணியல் பின்றே.

58 

இசைத்தலும் உரிய வேறிடத் தான.

59 

எடுத்த மொழிஇனஞ் செப்பலும் உரித்தே.

60 

கண்ணும் தோளும் முலையும் பிறவும் 
பன்மை சுட்டிய சினைநிலைக் கிளவி 
பன்மை கூறும் கடப்பாடு இலவே 
தம்வினைக்கு இயலும் எழுத்து அலங்கடையே.

61 

2. வேற்றுமையியல்

வேற்றுமை தாமே ஏழென மொழிப.

விளிகொள் வதன்கண் விளியோ டெட்டே.

அவைதாம், 
பெயர் ஐ ஒடு கு 
இன் அது கண் விளி என்னும் ஈற்ற.

அவற்றுள், 
எழுவாய் வேற்றுமை பெயர்தோன்று நிலையே.

பொருண்மை சுட்டல் வியங்கொள வருதல் 
வினைநிலை உரைத்தல் வினாவிற்கு ஏற்றல் 
பண்பு கொளவருதல் பெயர் கொளவருதல் என்று 
அன்றி அனைத்தும் பெயர்ப்பய னிலையே.

பெயரின் ஆகிய தொகையுமார் உளவே 
அவ்வும் உரிய அப்பாலான.

எவ்வயின் பெயரும் வெளிப்படத் தோன்றி 
அவ்வியல் நிலையல் செவ்விது என்ப.

கூறிய முறையின் உருபுநிலை திரியாது 
ஈறு பெயர்க்காகும் இயற்கைய என்ப.

பெயர்நிலைக் கிளவி காலம் தோன்றா 
தொழில்நிலை ஒட்டும் ஒன்றலங் கடையே.

இரண்டாகுவதே, 
ஐஎனப் பெயரிய வேற்றுமைக் கிளவி 
எவ்வழி வரினும் வினையே வினைக்குறிப்பு 
அவ்விரு முதலின் தோன்றும் அதுவே.

10 

காப்பின் ஒப்பின் ஊர்தியின் இழையின் 
ஒப்பின் புகழின் பழியின் என்றா 
பெறலின் இழவின் காதலின் வெகுளியின் 
செறலின் உவத்தலின் கற்பின் என்றா 
அறுத்தலின் குறைத்தலின் தொகுத்தலின் பிரித்தலின் 
நிறுத்தலின் அளவின் எண்ணின் என்றா 
ஆக்கலின் சார்தலின் செலவின் கன்றலின் 
நோக்கலின் அஞ்சலின் சிதைப்பின் என்றா 
அன்ன பிறவும் அம்முதற் பொருள 
என்ன கிளவியும் அதன்பால என்மனார்.

11 

மூன்றாகுவதே, 
ஒடுஎனப் பெயரிய வேற்றுமைக் கிளவி 
வினைமுதல் கருவி அனைமுதற் றதுவே.

12 

அதனின் இயறல் அதன்தகு கிளவி 
அதன் வினைப்படுதல் அதனின் ஆதல் 
அதனின் கோடல் அதனொடு மயங்கல் 
அதனொடு இயைந்த ஒருவினைக் கிளவி 
அதனொடு இயைந்த வேறுவினைக் கிளவி 
அதனொடு இயைந்த ஒப்பல் ஒப்புரை 
இன் ஆன் ஏது ஈங்கு என வரூஉம் 
அன்ன பிறவும் அதன்பால என்மனார்.

13 

நான்காகுவதே, 
கு எனப்பெயரிய வேற்றுமைக் கிளவி 
எப்பொருள் ஆயினும் கொள்ளும் அதுவே.

14 

அதற்குவினை உடைமையின் அதற்கு உடம்படுதலின் 
அதற்குப் படு பொருளின் அதுவாகு கிளவியின் 
அதற்கு யாப்புடைமையின் அதன் பொருட்டாதலின் 
நட்பின் பகையின் காதலின் சிறப்பின் என்று 
அப்பொருட் கிளவியும் அதன்பால என்மனார்.

15 

ஐந்தாகுவதே, 
இன் எனப்பெயரிய வேற்றுமைக் கிளவி 
இதனின் இற்று இது என்னும் அதுவே.

16 

வண்ணம் வடிவே அளவே சுவையே 
தண்மை வெம்மை அச்சம் என்றா 
நன்மை தீமை சிறுமை பெருமை 
வன்மை மென்மை கடுமை என்றா 
முதுமை இளமை சிறத்தல் இழித்தல் 
புதுமை பழமை ஆக்கம் என்றா 
இன்மை உடைமை நாற்றம் தீர்தல் 
பன்மை சின்மை பற்றுவிடுதல் என்று 
அன்ன பிறவும் அதன்பால என்மனார்.

17 

ஆறாகுவதே, 
அது எனப்பெரிய வேற்றுமைக் கிளவி 
தன்னினும் பிறிதினும் இதனது இது எனும் 
அன்ன கிளவிக் கிழமைத்து அதுவே.

18 

இயற்கையின் உடைமையின் முறைமையின் கிழமையின் 
செயற்கையின் முதுமையின் வினையின் என்றா 
கருவியின் துணையின் கலத்தின் முதலின் 
ஒருவழி உறுப்பின் குழுவின் என்றா 
தெரிந்துமொழிச் செய்தியின் நிலையின் வாழ்ச்சியின் 
திரிந்து வேறுபடூஉம் பிறவும் அன்ன 
கூறிய மருங்கின் தோன்றும் கிளவி 
ஆறன் பால என்மனார் புலவர்.

19 

ஏழாகுவதே, 
கண்எ னப்பெயரிய வேற்றுமை கிளவி 
வினைசெய் இடத்தின் நிலத்தின் காலத்தின் 
அனைவகைக் குறிப்பின் தோன்றும் அதுவே.

20 

கண் கால் புறம் அகம் உள் உழை கீழ் மேல் 
பின் சார் அயல் புடை தேவகை எனாஅ 
முன் இடை கடை தலை வலம் இடம் எனாஅ 
அன்ன பிறவும் அதன்பால என்மனார்.

21 

வேற்றுமைப் பொருளை விரிக்கும் காலை 
ஈற்றுநின்று இயலும் தொகைவயின் பிரிந்து 
பல் ஆறாகப் பொருள் புணர்ந்து இசைக்கும் 
எல்லாச் சொல்லும் உரிய என்ப.

22 

3. வேற்றுமைமயங்கியல்

கருமம் அல்லாச் சார்புஎன் கிளவிக்கு 
உரிமையும் உடைத்தே கண்என் வேற்றுமை.

சினை நிலைக்கிளவிக்கு ஐயும் கண்ணும் 
வினை நிலை ஒக்கும் என்மனார் புலவர்.

கன்றலும் செலவும் ஒன்றுமார் வினையே.

முதற்சினைக் கிளவிக்கு அது என் வேற்றுமை 
முதற்கண் வரினே சினைக்கு ஐ வருமே.

முதல்முன் ஐவரின் கண் என் வேற்றுமை 
சினைமுன் வருதல் தெள்ளிது என்ப.

முதலும் சினையும் பொருள்வேறு படாஅ 
நுவலும் காலைச் சொற்குறிப் பினவே.

பிண்டப் பெயரும் ஆயியல் திரியா 
பண்டியல் மருங்கின் மரீஇய மரபே.

ஒருவினை ஒடுச்சொல் உயர்பின் வழித்தே.

மூன்றனும் ஐந்தனும் தோன்றக் கூறிய 
ஆக்கமொடு புணர்ந்த ஏதுக் கிளவி 
நோக்கோ ரனைய என்மனார் புலவர்.

இரண்டன் மருங்கின் நோக்கல் நோக்கம் அவ் 
இரண்டன் மருங்கின் ஏதுவும் ஆகும்.

10 

அது என் வேற்றுமை உயர்திணைத் தொகைவயின் 
அது என் உருபுகெடக் குகரம் வருமே.

11 

தடுமாறு தொழிற்பெயர்க்கு இரண்டும் மூன்றும் 
கடிநிலை இலவே பொருள்வயி னான.

12 

ஈற்றுப்பெயர் முன்னர் மெய்யறி பனுவலின் 
வேற்றுமை தெரிப உணரு மோரே.

13 

ஓம்படைக் கிளவிக்கு ஐயும் ஆனும் 
தாம் பிரிவிலவே தொகைவரு காலை.

14 

ஆறன் மருங்கின் வாழ்ச்சிக் கிழமைக்கு 
ஏழும் ஆகும் உறைநிலத் தான.

15 

குத்தொக வரூஉம் கொடைஎதிர் கிளவி 
அப்பொருள் ஆறற்கு உரித்தும் ஆகும்.

16 

அச்சக் கிளவிக்கு ஐந்தும் இரண்டும் 
எச்சம் இலவே பொருள்வயி னான.

17 

அன்ன பிறவும் தொல்நெறி பிழையாது 
உருபினும் பொருளினும் மெய்தடு மாறி 
இருவயின் நிலையும் வேற்றுமை எல்லாம் 
திரிபிடன் இலவே தெரியு மோர்க்கே.

18 

உருபுதொடர்ந்து அடுக்கிய வேற்றுமைக் கிளவி 
ஒருசொல் நடைய பொருள்செல் மருங்கே.

19 

இறுதியும் இடையும் எல்லா உருபும் 
நெறிபடு பொருள்வயின் நிலவுதல் வரையார்.

20 

பிறிதுபிறிது ஏற்றலும் உருபுதொக வருதலும் 
நெறிபட வழங்கிய வழிமருங்கு என்ப.

21 

ஐயும் கண்ணும் அல்லாப் பொருள்வயின் 
மெய்யுருபு தொகாஅ இறுதி யான.

22 

யாதன் உருபின் கூறிற்று ஆயினும் 
பொருள்செல் மருங்கின் வேற்றுமை சாரும்.

23 

எதிர்மறுத்து மொழியினும் தத்தம் மரபின் 
பொருள்நிலை திரியா வேற்றுமைச் சொல்லே.

24 

கு ஐ ஆன் என வரூஉம் இறுதி 
அவ்வொடு சிவணும் செய்யு ளுள்ளே.

25 

அ எனப் பிறத்தல் அஃறிணை மருங்கின் 
குவ்வும் ஐயும் இல்என மொழிப.

26 

இதன் அது இது இற்று என்னும் கிளவியும் 
அதனைக் கொள்ளும் பொருள் வயினானும் 
அதனான் செயற்படற்கு ஒத்த கிளவியும் 
முறைக்கொண்டு எழுந்த பெயர்ச்சொல் கிளவியும் 
பால்வரை கிளவியும் பண்பின் ஆக்கமும் 
காலத்தின் அறியும் வேற்றுமைக் கிளவியும் 
பற்றுவிடு கிளவியும் தீர்ந்துமொழிக் கிளவியும் 
அன்ன பிறவும் நான்கன் உருபின் 
தொல்நெறி மரபின தோன்ற லாறே.

27 

ஏனை உருபும் அன்ன மரபின 
மானம் இலவே சொல்முறை யான.

28 

வினையே செய்வது செயப்படு பொருளே 
நிலனே காலம் கருவி என்றா 
இன்னதற்கு இது பயனாக என்னும் 
அன்ன மரபின் இரண்டொடும் தொகைஇ 
ஆயெட்டு என்ப தொழில்முதல் நிலையே.

29 

அவைதாம், 
வழங்கியல் மருங்கின் குன்றுவ குன்றும்.

30 

முதலிற் கூறும் சினையறி கிளவியும் 
சினையிற் கூறும் முதல்அறி கிளவியும் 
பிறந்தவழிக் கூறலும் பண்புகொள் பெயரும் 
இயன்றது மொழிதலும் இருபெய ரொட்டும் 
வினைமுதல் உரைக்கும் கிளவியொடு தொகைஇ 
அனை மரபினவே ஆகுபெயர்க் கிளவி.

31 

அவைதாம், 
தத்தம் பொருள்வயின் தம்மொடு சிவணலும் 
ஒப்பில் வழியான் பிறிதுபொருள் சுட்டலும் 
அப்பண் பினவே நுவலும் காலை 
வேற்றுமை மருங்கின் போற்றல் வேண்டும்.

32 

அளவும் நிறையும் அவற்றொடு கொள்வழி 
உளஎன மொழிப உணர்ந்திசி னோரே.

33 

கிளந்த அல்ல வேறுபிற தோன்றினும் 
கிளந்தவற்று இயலான் உணர்ந்தனர் கொளலே.

34 

4. விளிமரபு

விளி எனப்படுப கொள்ளும் பெயரொடு 
தெளியத் தோன்றும் இயற்கைய என்ப.

அவ்வே, 
இவ்என அறிதற்கு மெய்பெறக் கிளப்ப.

அவைதாம், 
இ உ ஐ ஓ என்னும் இறுதி 
அப்பால் நான்கே உயர்திணை மருங்கின் 
மெய்ப்பொருள் சுட்டிய விளிகொள் பெயரே.

அவற்றுள், 
இ ஈ ஆகும் ஐ ஆய் ஆகும்.

ஓவும் உவ்வும் ஏயொடு சிவணும்.

உகரம் தானே குற்றியலுகரம்.

ஏனை உயிரே உயர்திணை மருங்கின் 
தாம் விளி கொள்ளா என்மனார் புலவர்.

அளபெடை மிகூஉம் இகர இறுபெயர் 
இயற்கைய ஆகும் செயற்கைய என்ப.

முறைப்பெயர் மருங்கின் ஐ என் இறுதி 
ஆவொடு வருதற்கு உரியவும் உளவே.

அண்மைச் சொல்லே இயற்கை ஆகும்.

10 

ன ர ல ள என்னும் அந்நான்கு என்ப 
புள்ளி இறுதி விளிகொள் பெயரே.

11 

ஏனைப் புள்ளி ஈறுவிளி கொள்ளா.

12 

அன் என் இறுதி ஆ ஆகும்மே.

13 

அண்மைச் சொல்லிற்கு அகரமும் ஆகும்.

14 

ஆன் என் இறுதி இயற்கை ஆகும்.

15 

தொழிலின் கூறும் ஆன் என் இறுதி 
ஆய் ஆகும்மே விளி வயினான.

16 

பண்புகொள் பெயரும் அதன் ஓரற்றே.

17 

அளபெடைப் பெயரே அளபெடை இயல.

18 

முறைப்பெயர்க் கிளவி ஏயொடு வருமே.

19 

தான்என் பெயரும் சுட்டுமுதற் பெயரும் 
யான் என் பெயரும் வினாவின் பெயரும் 
அன்றி அனைத்தும் விளிகோள் இலவே.

20 

ஆரும் அருவும் ஈரொடு சிவணும்.

21 

தொழிற்பெயர் ஆயின் ஏகாரம் வருதலும் 
வழுக்கு இன்று என்மனார் வயங்கியோரே.

22 

பண்புகொள் பெயரும் அதன் ஓரற்றே.

23 

அளபெடைப் பெயரே அளபெடை இயல.

24 

சுட்டுமுதற் பெயரே முற்கிளந் தன்ன.

25 

நும்மின் திரிபெயர் வினாவின் பெயர் என்று 
அம்முறை இரண்டும் அவற்று இயல்பு இயலும்.

26 

எஞ்சிய இரண்டின் இறுதிப் பெயரே 
நின்ற ஈற்றயல் நீட்டம் வேண்டும்.

27 

அயல் நெடிதாயின் இயற்கை ஆகும்.

28 

வினையினும் பண்பினும் 
நினையத் தோன்றும் ஆள்என் இறுதி 
ஆய் ஆகும்மே விளி வயினான.

29 

முறைப்பெயர்க் கிளவி முறைப்பெயர் இயல.

30 

சுட்டுமுதற் பெயரும் வினாவின் பெயரும் 
முன்கிளந் தன்ன என்மனார் புலவர்.

31 

அளபெடைப் பெயரே அளபெடை இயல.

32 

கிளந்த இறுதி அஃறிணை விரவுப்பெயர் 
விளம்பிய நெறிய விளிக்குங் காலை.

33 

புள்ளியும் உயிரும் இறுதி ஆகிய 
அஃறிணை மருங்கின் எல்லாப் பெயரும் 
விளிநிலை பெறூஉம் காலம் தோன்றின் 
தெளிநிலை உடைய ஏகாரம் வரலே.

34 

உள எனப்பட்ட எல்லாப் பெயரும் 
அளபு இறந்தனவே விளிக்கும் காலை 
சேய்மையின் இசைக்கும் வழக்கத் தான.

35 

அம்ம என்னும் அசைச்சொல் நீட்டம் 
அம்முறைப் பெயரொடு சிவணாது ஆயினும் 
விளியொடு கொள்ப தெளியுமோரே.

36 

த ந நு எ என அவை முதலாகித் 
தன்மை குறித்த ன ர ள என் இறுதியும் 
அன்ன பிறவும் பெயர்நிலை வரினே 
இன்மை வேண்டும் விளியொடு கொளலே.

37 

5. பெயரியல்

எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே.

பொருண்மை தெரிதலும் சொன்மை தெரிதலும் 
சொல்லின் ஆகும் என்மனார் புலவர்.

தெரிபுவேறு நிலையலும் குறிப்பின் தோன்றலும் 
இருபாற்று என்ப பொருண்மை நிலையே.

சொல் எனப்படுப பெயரே வினையென்று 
ஆயிரண்டு என்ப அறிந்திசினோரே.

இடைச்சொல் கிளவியும் உரிச்சொல் கிளவியும் 
அவற்றுவழி மருங்கின் தோன்றும் என்ப.

அவற்றுள், 
பெயர் எனப்படுபவை தெரியுங் காலை 
உயர்திணைக்கு உரிமையும் அஃறிணைக்கு உரிமையும் 
ஆயிரு திணைக்கும் ஓரன்ன உரிமையும் 
அம்மூ உருபின தோன்றல் ஆறே.

இருதிணைப் பிரிந்த ஐம்பால் கிளவிக்கும் 
உரியவை உரிய பெயர்வயி னான.

அவ்வழி, 
அவன் இவன் உவன் என வரூஉம் பெயரும் 
அவள் இவள் உவள் என வரூஉம் பெயரும் 
அவர் இவர் உவர் என வரூஉம் பெயரும் 
யான் யாம் நாம் என வரூஉம் பெயரும் 
யாவன் யாவள் யாவர் என்னும் 
ஆவயின் மூன்றொடு அப்பதினைந்தும் 
பால்அறி வந்த உயர்திணைப் பெயரே.

ஆண்மை அடுத்த மகன் என்கிளவியும் 
பெண்மை அடுத்த மகள் என்கிளவியும் 
பெண்மை அடுத்த இகர இறுதியும் 
நம்ஊர்ந்து வரூஉம் இகர ஐகாரமும் 
முறைமை சுட்டா மகனும் மகளும் 
மாந்தர் மக்கள் என்னும் பெயரும் 
ஆடூஉ மகடூஉ ஆயிரு கிளவியும் 
சுட்டு முதலாகிய அன்னும் ஆனும் 
அவை முதலாகிய பெண்டுஎன் கிளவியும் 
ஒப்பொடு வரூஉம் கிளவியொடு தொகைஇ 
அப்பதினைந்தும் அவற்றோ ரன்ன.

எல்லாரும் என்னும் பெயர்நிலைக் கிளவியும் 
எல்லீரும் என்னும் பெயர்நிலைக் கிளவியும் 
பெண்மை அடுத்த மகன்என் கிளவியும் 
அன்ன இயல என்மனார் புலவர்.

10 

நிலப்பெயர் குடிப்பெயர் குழுவின் பெயரே 
வினைப்பெயர் உடைப்பெயர் பண்புகொள் பெயரே 
பல்லோர்க் குறித்த முறைநிலைப் பெயரே 
பல்லோர்க் குறித்த சினைநிலைப் பெயரே 
பல்லோர்க் குறித்த திணைநிலைப் பெயரே 
கூடிவரு வழக்கின் ஆடுஇயல் பெயரே 
இன்றிவர் என்னும் எண்ணியல் பெயரொடு 
அன்றி அனைத்தும் அவற்று இயல்பினவே.

11 

அன்ன பிறவும் உயர்திணை மருங்கில் 
பன்மையும் ஒருமையும் பால்அறி வந்த 
என்ன பெயரும் அத்திணை யவ்வே.

12 

அது இது உது என வரூஉம் பெயரும் 
அவை முதலாகிய ஆய்தப் பெயரும் 
அவை இவை உவை என வரூஉம் பெயரும் 
அவை முதலாகிய வகரப் பெயரும் 
யாது யா யாவை என்னும் பெயரும் 
ஆவயின் மூன்றொடு அப்பதினைந்தும் 
பால்அறி வந்த அஃறிணைப் பெயரே.

13 

பல்ல பல சில என்னும் பெயரும் 
உள்ள இல்ல என்னும் பெயரும் 
வினைப்பெயர்க் கிளவியும் பண்புகொள் பெயரும் 
இனைத்து எனக்கிளக்கும் எண்ணுக்குறிப் பெயரும் 
ஒப்பின் ஆகிய பெயர்நிலை உளப்பட 
அப்பால் ஒன்பதும் அவற்றோ ரன்ன.

14 

கள்ளொடு சிவணும் அவ்இயற் பெயரே 
கொள்வழி உடைய பலஅறி சொற்கே.

15 

அன்ன பிறவும் அஃறிணை மருங்கின் 
பன்மையும் ஒருமையும் பால்அறி வந்த 
என்ன பெயரும் அத்திணை யவ்வே.

16 

தெரிநிலை உடைய அஃறிணை இயற்பெயர் 
ஒருமையும் பன்மையும் வினையொடு வரினே.

17 

இருதிணைச் சொற்கும் ஓரன்ன உரிமையின் 
திரிபு வேறுபடூஉம் எல்லாப் பெயரும் 
நினையும் காலை தத்தம் மரபின் 
வினையொடு அல்லது பால்தெரிபு இலவே.

18 

நிகழூஉ நின்ற பலர்வரை கிளவியின் 
உயர்திணை ஒருமை தோன்றலும் உரித்தே 
அன்ன மரபின் வினைவயி னான.

19 

இயற்பெயர் சினைப்பெயர் சினைமுதற்பெயரே 
முறைப்பெயர்க் கிளவி தாமே தானே 
எல்லாம் நீயிர் நீஎனக் கிளந்து 
சொல்லிய அல்ல பிறவும் ஆஅங்கு 
அன்னவை தோன்றின் அவற்றொடும் கொளலே.

20 

அவற்றுள், 
நான்கே இயற்பெயர் நான்கே சினைப்பெயர் 
நான்கென மொழிமனார் சினைமுதற் பெயரே 
முறைப்பெயர்க் கிளவி இரண்டு ஆகும்மே 
ஏனைப் பெயரே தத்தம் மரபின.

21 

அவைதாம், 
பெண்மை இயற்பெயர் ஆண்மை இயற்பெயர் 
பன்மை இயற்பெயர் ஒருமை இயற்பெயர் என்று 
அந்நான்கு என்ப இயற்பெயர் நிலையே.

22 

பெண்மைச் சினைப்பெயர் ஆண்மைச் சினைப்பெயர் 
பன்மைச் சினைப்பெயர் ஒருமைச் சினைப்பெயர் என்று 
அந்நான்கு என்ப சினைப்பெயர் நிலையே.

23 

பெண்மை சுட்டிய சினைமுதற் பெயரே 
ஆண்மை சுட்டிய சினைமுதற் பெயரே 
பன்மை சுட்டிய சினைமுதற் பெயரே 
ஒருமை சுட்டிய சினைமுதற் பெயர் என்று 
அந்நான்கு என்ப சினைமுதற் பெயரே.

24 

பெண்மை முறைப்பெயர் ஆண்மை முறைப்பெயர் என்று 
ஆயிரண்டு என்ப முறைப்பெயர் நிலையே.

25 

பெண்மை சுட்டிய எல்லாப் பெயரும் 
ஒன்றற்கும் ஒருத்திக்கும் ஒன்றிய நிலையே.

26 

ஆண்மை சுட்டிய எல்லாப் பெயரும் 
ஒன்றற்கும் ஒருவற்கும் ஒன்றிய நிலையே.

27 

பன்மை சுட்டிய எல்லாப் பெயரும் 
ஒன்றே பலவே ஒருவர் என்னும் 
என்று இப்பாற்கும் ஓரன்னவ்வே.

28 

ஒருமை சுட்டிய எல்லாப் பெயரும் 
ஒன்றற்கும் ஒருவர்க்கும் ஒன்றிய நிலையே.

29 

தாம் என்கிளவி பன்மைக்கு உரித்தே.

30 

தான் என்கிளவி ஒருமைக்கு உரித்தே.

31 

எல்லாம் என்னும் பெயர்நிலைக் கிளவி 
பல்வழி நுதலிய நிலைத்து ஆகும்மே

32 

தன்உள்ளுறுத்த பன்மைக்கு அல்லது 
உயர்திணை மருங்கின் ஆக்கம் இல்லை.

33 

நீயிர் நீ என வரூஉம் கிளவி 
பால்தெரிபு இலவே உடன்மொழிப் பொருள.

34 

அவற்றுள், 
நீஎன் கிளவி ஒருமைக்கு உரித்தே.

35 

ஏனைக் கிளவி பன்மைக்கு உரித்தே.

36 

ஒருவர் என்னும் பெயர்நிலைக் கிளவி 
இருபாற்கும் உரித்தே தெரியும் காலை.

37 

தன்மை சுட்டின் பன்மைக்கு ஏற்கும்.

38 

இன்ன பெயரே இவைஎனல் வேண்டின் 
முன்னம் சேர்த்தி முறையின் உணர்தல்.

39 

மகடூஉ மருங்கின் பால்திரி கிளவி 
மகடூஉ இயற்கை தொழில்வயி னான.

40 

ஆ ஓ ஆகும் பெயருமார் உளவே 
ஆயிடன் அறிதல் செய்யுளுள்ளே.

41 

இறைச்சிப் பொருள்வயின் செய்யுளுள் கிளக்கும் 
இயற்பெயர்க் கிளவி உயர்திணை சுட்டா 
நிலத்துவழி மருங்கின் தோன்ற லான.

42 

திணையொடு பழகிய பெயர் அலங்கடையே.

43 

6. வினையியல்

வினை எனப்படுவது வேற்றுமை கொள்ளாது 
நினையும் காலைக் காலமொடு தோன்றும்.

காலம் தாமே மூன்று என மொழிப.

இறப்பின் நிகழ்வின் எதிர்வின் என்றா 
அம்முக் காலமும் குறிப்பொடும் கொள்ளும் 
மெய்ந்நிலை உடைய தோன்ற லாறே.

குறிப்பினும் வினையினும் நெறிப்படத் தோன்றிக் 
காலமொடு வரூஉம் வினைச்சொல் எல்லாம் 
உயர்திணைக்கு உரிமையும் அஃறிணைக்கு உரிமையும் 
ஆயிரு திணைக்கும் ஓரன்ன உரிமையும் 
அம்மூ உருபின தோன்ற லாறே.

அவைதாம், 
அம் ஆம் எம் ஏம் என்னும் கிளவியும் 
உம்மொடு வரூஉம் க ட த ற என்னும் 
அந்நாற் கிளவியொடு ஆயெண் கிளவியும் 
பன்மை உரைக்கும் தன்மைச் சொல்லே.

க ட த ற என்னும் 
அந்நான்கு ஊர்ந்த குன்றியலுகரமொடு 
ஏன் அல் என வரூஉம் ஏழும் 
தன்வினை உரைக்கும் தன்மைச் சொல்லே.

அவற்றுள், 
செய்கு என் கிளவி வினையொடு முடியினும் 
அவ்வியல் திரியாது என்மனார் புலவர்.

அன் ஆன் அள் ஆள் என்னும் நான்கும் 
ஒருவர் மருங்கின் படர்க்கைச் சொல்லே.

அர் ஆர் ப என வரூஉம் மூன்றும் 
பல்லோர் மருங்கின் படர்க்கைச் சொல்லே.

மாரைக் கிளவியும் பல்லோர் படர்க்கை 
காலக் கிளவியொடு முடியும் என்ப.

10 

பன்மையும் ஒருமையும் பால்அறி வந்த 
அந்நால் ஐந்தும் மூன்று தலையிட்ட 
முன்னுறக் கிளந்த உயர்திணை யவ்வே.

11 

அவற்றுள், 
பன்மை உரைக்கும் தன்மைக் கிளவி 
எண்ணீயல் மருங்கின் திரிபவை உளவே.

12 

யா அர் என்னும் வினாவின் கிளவி 
அத்திணை மருங்கின் முப்பாற்கும் உரித்தே.

13 

பால்அறி மரபின் அம்மூ ஈற்றும் 
ஆ ஓ ஆகும் செய்யுளுள்ளே.

14 

ஆய் என் கிளவியும் அவற்றொடு கொள்ளும்.

15 

அதுச்சொல் வேற்றுமை உடைமை யானும் 
கண் என் வேற்றுமை நிலத்தி னானும் 
ஒப்பினானும் பண்பினானும் என்று 
அப்பால் காலம் குறிப்பொடு தோன்றும்.

16 

அன்மையின் இன்மையின் உண்மையின் வன்மையின் 
அன்ன பிறவும் குறிப்பொடு கொள்ளும் 
என்ன கிளவியும் குறிப்பே காலம்.

17 

பன்மையும் ஒருமையும் பால்அறி வந்த 
அன்ன மரபின் குறிப்பொடு வரூஉம் 
காலக் கிளவி உயர்திணை மருங்கின் 
மேலைக் கிளவியொடு வேறுபாடு இலவே.

18 

அ ஆ வ என வரூஉம் இறுதி 
அப்பால் மூன்றே பலவற்றுப் படர்க்கை.

19 

ஒன்றன் படர்க்கை த ற ட ஊர்ந்த 
குன்றிய லுகரத்து இறுதி ஆகும்.

20 

பன்மையும் ஒருமையும் பால்அறி வந்த 
அம்மூ இரண்டும் அஃறிணை யவ்வே.

21 

அத்திணை மருங்கின் இருபாற் கிளவிக்கும் 
ஒக்கும் என்ப எவன் என் வினாவே.

22 

இன்று இல உடைய என்னும் கிளவியும் 
அன்று உடைத்து அல்ல என்னும் கிளவியும் 
பண்பு கொள் கிளவியும் உளஎன் கிளவியும் 
பண்பின் ஆகிய சினைமுதற் கிளவியும் 
ஒப்பொடு வரூஉம் கிளவியொடு தொகைஇ 
அப்பால் பத்தும் குறிப்பொடு கொள்ளும்.

23 

பன்மையும் ஒருமையும் பால்அறி வந்த 
அன்ன மரபின் குறிப்பொடு வரூஉம் 
காலக் கிளவி அஃறிணை மருங்கின் 
மேலைக் கிளவியொடு வேறுபாடு இலவே.

24 

முன்னிலை வியங்கோள் வினையெஞ்சு கிளவி 
இன்மை செப்பல் வேறுஎன் கிளவி 
செய்ம்மன செய்யும் செய்த என்னும் 
அம்முறை நின்ற ஆயெண் கிளவியும் 
திரிபு வேறு படூஉம் செய்திய வாகி 
இருதிணைச் சொற்கும் ஓரன்ன உரிமைய.

25 

அவற்றுள், 
முன்னிலைக் கிளவி 
இ ஐ ஆய் என வரூஉம் மூன்றும் 
ஒப்பத் தோன்றும் ஒருவர்க்கும் ஒன்றற்கும்.

26 

இர் ஈர் மின் என வரூஉம் மூன்றும் 
பல்லோர் மருங்கினும் பலவற்று மருங்கினும் 
சொல்லோர் அனைய என்மனார் புலவர்.

27 

எஞ்சிய கிளவி இடத்தொடு சிவணி 
ஐம்பாற்கும் உரிய தோன்றல் ஆறே.

28 

அவற்றுள், 
முன்னிலை தன்மை ஆயீர் இடத்தொடு 
மன்னாது ஆகும் வியங்கோட் கிளவி.

29 

பல்லோர் படர்க்கை முன்னிலை தன்மை 
அவ்வயின் மூன்றும் நிகழும் காலத்துச் 
செய்யும் என்னும் கிளவியொடு கொள்ளா.

30 

செய்து செய்யூ செய்பு செய்தென 
செய்யியர் செய்யிய செயின் செய செயற்கு என 
அவ்வகை ஒன்பதும் வினையெஞ்சு கிளவி.

31 

பின் முன் கால் கடை வழி இடத்து என்னும் 
அன்ன மரபின் காலம் கண்ணிய 
என்ன கிளவியும் அவற்று இயல்பினவே.

32 

அவற்றுள், 
முதல்நிலை மூன்றும் வினைமுதல் முடிபின.

33 

அம்முக் கிளவியும் சினைவினை தோன்றின் 
சினையொடு முடியா முதலொடு முடியினும் 
வினை ஓரனைய என்மனார் புலவர்.

34 

ஏனை எச்சம் வினைமுத லானும் 
ஆன்வந்து இயையும் வினைநிலை யானும் 
தாம்இயல் மருங்கின் முடியும் என்ப.

35 

பன்முறை யானும் வினையெஞ்சு கிளவி 
சொன்முறை முடியாது அடுக்குந வரினும் 
முன்னது முடிய முடியுமன் பொருளே.

36 

நிலனும் பொருளும் காலமும் கருவியும் 
வினைமுதற் கிளவியும் வினையும் உளப்பட 
அவ்ஆறு பொருட்கும் ஓரன்ன உரிமைய 
செய்யும் செய்த என்னும் சொல்லே.

37 

அவற்றொடு வருவழிச் செய்யும் என்கிளவி 
முதற்கண் வரைந்த மூவீற்றும் உரித்தே.

38 

பெயரெஞ்சு கிளவியும் வினையெஞ்சு கிளவியும் 
எதிர்மறுத்து மொழியினும் பொருள்நிலை திரியா.

39 

தத்தம் எச்சமொடு சிவணும் குறிப்பின் 
எச்சொல் ஆயினும் இடைநிலை வரையார்.

40 

அவற்றுள், 
செய்யும் என்னும் பெயரெஞ்சு கிளவிக்கு 
மெய்யொடும் கெடுமே ஈற்றுமிசை உகரம் 
அவ்விடன் அறிதல் என்மனார் புலவர்.

41 

செய்துஎன் எச்சத்து இறந்த காலம் 
எய்துஇடன் உடைத்தே வாராக் காலம்.

42 

முந்நிலைக் காலமும் தோன்றும் இயற்கை 
எம்முறைச் சொல்லும் நிகழும் காலத்து 
மெய்ந்நிலைப் பொதுச்சொல் கிளத்தல் வேண்டும்.

43 

வாராக் காலத்தும் நிகழும் காலத்தும் 
ஓராங்கு வரூஉம் வினைச்சொற் கிளவி 
இறந்த காலத்துக் குறிப்பொடு கிளத்தல் 
விரைந்த பொருள என்மனார் புலவர்.

44 

மிக்கதன் மருங்கின் வினைச்சொல் சுட்டி 
அப்பண்பு குறித்த வினைமுதற் கிளவி 
செய்வது இல்வழி நிகழும் காலத்து 
மெய்பெறத் தோன்றும் பொருட்டு ஆகும்மே.

45 

இதுசெயல் வேண்டும் என்னும் கிளவி 
இருவயின் நிலையும் பொருட்டு ஆகும்மே 
தன் பாலானும் பிறன் பாலானும்.

46 

வன்புற வரூஉம் வினாவுடை வினைச்சொல் 
எதிர்மறுத்து உணர்த்துதற்கு உரிமையும் உடைத்தே.

47 

வாராக் காலத்து வினைச்சொற் கிளவி 
இறப்பினும் நிகழ்வினும் சிறப்பத் தோன்றும் 
இயற்கையும் தெளிவும் கிளக்கும் காலை.

48 

செயப்படு பொருளைச் செய்தது போலத் 
தொழிற்படக் கிளத்தலும் வழக்கியல் மரபே.

49 

இறப்பே எதிர்வே ஆயிரு காலமும் 
சிறப்பத் தோன்றும் மயங்குமொழிக் கிளவி.

50 

ஏனைக் காலமும் மயங்குதல் வரையார்.

51 

7. இடையியல்

இடைஎனப் படுப பெயரொடும் வினையொடும் 
நடைபெற்று இயலும் தமக்கு இயல்பு இலவே.

அவைதாம், 
புணரியல் நிலையிடைப் பொருள்நிலைக்கு உதநவும் 
வினைசெயல் மருங்கின் காலமொடு வருநவும் 
வேற்றுமைப் பொருள்வயின் உருபு ஆகுநவும் 
அசைநிலைக் கிளவி ஆகி வருநவும் 
இசைநிறைக் கிளவி ஆகி வருநவும் 
தத்தம் குறிப்பின் பொருள் செய்குநவும் 
ஒப்புஇல் வழியான் பொருள் செய்குநவும் என்று 
அப்பண் பினவே நுவலும் காலை.

அவைதாம், 
முன்னும் பின்னும் மொழியடுத்து வருதலும் 
தம்ஈறு திரிதலும் பிறிதவண் நிலையலும் 
அன்னவை எல்லாம் உரிய என்ப.

கழிவே ஆக்கம் ஒழியிசைக் கிளவி என்று 
அம்மூன்று என்ப மன்னைச் சொல்லே.

விழைவே காலம் ஒழியிசைக் கிளவியென்று 
அம்மூன்று என்ப தில்லைச் சொல்லே.

அச்சம் பயமிலி காலம் பெருமை என்று 
அப்பால் நான்கே கொன்னைச் சொல்லே.

எச்சம் சிறப்பே ஐயம் எதிர்மறை 
முற்றே எண்ணே தெரிநிலை ஆக்கமென்று 
அப்பால் எட்டே உம்மைச் சொல்லே.

பிரிநிலை வினாவே எதிர்மறை ஒழியிசை 
தெரிநிலைக் கிளவி சிறப்பொடு தொகைஇ 
இருமூன்று என்ப ஓகா ரம்மே.

தேற்றம் வினாவே பிரிநிலை எண்ணே 
ஈற்றசை இவ்வைந்து ஏகா ரம்மே.

வினையே குறிப்பே இசையே பண்பே 
எண்ணே பெயரொடு அவ்வறு கிளவியும் 
கண்ணிய நிலைத்தே எனவென் கிளவி.

10 

என்றுஎன் கிளவியும் அதனோ ரற்றே.

11 

விழைவின் தில்லை தன்னிடத்து இயலும்.

12 

தெளிவின் ஏயும் சிறப்பின் ஓவும் 
அளபின் எடுத்த இசைய என்ப.

13 

மற்றுஎன் கிளவி வினைமாற்று அசைநிலை 
அப்பால் இரண்டென மொழிமனார் புலவர்.

14 

எற்றுஎன் கிளவி இறந்த பொருட்டே.

15 

மற்றையது என்னும் கிளவி தானே 
சுட்டுநிலை ஒழிய இனம் குறித்தன்றே.

16 

மன்றஎன் கிளவி தேற்றம் செய்யும்.

17 

தஞ்சக் கிளவி எண்மைப் பொருட்டே.

18 

அந்தில் ஆங்க அசைநிலைக் கிளவிஎன்று 
ஆயிரண்டு ஆகும் இயற்கைத்து என்ப.

19 

கொல்லே ஐயம்.

20 

எல்லே இலக்கம்.

21 

இயற்பெயர் முன்னர் ஆரைக் கிளவி 
பலர்க்குரி எழுத்தின் வினையொடு முடிமே.

22 

அசைநிலைக் கிளவி ஆகுவழி அறிதல்.

23 

ஏயும் குரையும் இசைநிறை அசைநிலை 
ஆயிரண்டு ஆகும் இயற்கைய என்ப.

24 

மாஎன் கிளவி வியங்கோள் அசைச்சொல்.

25 

மியா இக மோ மதி இகும் சின் என்னும் 
ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல்.

26 

அவற்றுள், 
இகுமும் சின்னும் ஏனை இடத்தொடும் 
தகுநிலை உடைய என்மனார் புலவர்.

27 

அம்ம கேட்பிக்கும்.

28 

ஆங்க உரையசை.

29 

ஒப்பில் போலியும் அப்பொருட்டு ஆகும்.

30 

யா கா 
பிற பிறக்கு அரோ போ மாது என வரூஉம் 
ஆயேழ் சொல்லும் அசைநிலைக் கிளவி.

31 

ஆக ஆகல் என்பது என்னும் 
ஆவயின் மூன்றும் பிரிவில் அசைநிலை.

32 

ஈர்ளபு இசைக்கும் இறுதியில் உயிரே 
ஆயியல் நிலையும் காலத்தானும் 
அளபெடை நிலையும் காலத்தானும் 
அளபெடை இன்றித் தான்வரும் காலையும் 
உளஎன மொழிப பொருள் வேறுபடுதல் 
குறிப்பின் இசையால் நெறிப்படத் தோன்றும்.

33 

நன்று ஈற்று ஏயும் அன்று ஈற்று ஏயும் 
அந்து ஈற்று ஓவும் அன் ஈற்று ஓவும் 
அன்ன பிறவும் குறிப்பொடு கொள்ளும்.

34 

எச்ச உம்மையும் எதிர்மறை உம்மையும் 
தத்தமுள் மயங்கும் உடனிலை இலவே.

35 

எஞ்சுபொருட் கிளவி செஞ்சொல் ஆயின் 
பிற்படக் கிளவார் முற்படக் கிளத்தல்.

36 

முற்றிய உம்மைத் தொகைச்சொல் மருங்கின் 
எச்சக் கிளவி உரித்தும் ஆகும்.

37 

ஈற்று நின்று இசைக்கும் ஏஎன் இறுதி 
கூற்றுவயின் ஒரளபு ஆகலும் உரித்தே.

38 

உம்மை எண்ணும் எனஎன் எண்ணும் 
தம்வயின் தொகுதி கடப்பாடு இலவே.

39 

எண் ஏகாரம் இடையிட்டுக் கொளினும் 
எண்ணுக் குறித்து இயலும் என்மனார் புலவர்.

40 

உம்மை தொக்க எனாஎன் கிளவியும் 
ஆ ஈறு ஆகிய என்றுஎன் கிளவியும் 
ஆயிரு கிளவியும் எண்ணுவழிப் பட்டன.

41 

அவற்றின் வரூஉம் எண்ணின் இறுதியும் 
பெயர்க்குரி மரபின் செவ்வெண் இறுதியும் 
ஏயின் ஆகிய எண்ணின் இறுதியும் 
யாவயின் வரினும் தொகையின்று இயலா.

42 

உம்மை எண்ணின் உருபு தொகல் வரையார்.

43 

உம் உந்து ஆகும் இடனுமார் உண்டே.

44 

வினையொடு நிலையினும் எண்ணுநிலை திரியா 
நினையல் வேண்டும் அவற்றவற்று இயல்பே.

45 

என்றும் எனவும் ஒடுவும் தோன்றி 
ஒன்றுவழி உடைய எண்ணினுள் பிரிந்தே.

46 

அவ்வச் சொல்லிற்கு அவையவை பொருளென 
மெய்பெறக் கிளந்த இயல ஆயினும் 
வினையொடும் பெயரொடும் நினையத் தோன்றித் 
திரிந்து வேறுபடினும் தெரிந்தனர் கொளலே.

47 

கிளந்த அல்ல வேறுபிற தோன்றினும் 
கிளந்தவற்று இயலான் உணர்ந்தனர் கொளலே.

48 

8. உரியியல்

உரிச்சொற் கிளவி விரிக்குங் காலை 
இசையினும் குறிப்பினும் பண்பினும் தோன்றி 
பெயரினும் வினையினும் மெய்தடுமாறி 
ஒருசொல் பலபொருட்கு உரிமை தோன்றினும் 
பலசொல் ஒருபொருட்கு உரிமை தோன்றினும் 
பயிலாத வற்றைப் பயின்றவை சார்த்தி 
தத்தம் மரபின் சென்றுநிலை மருங்கின் 
எச்சொல் ஆயினும் பொருள்வேறு கிளத்தல்.

வெளிப்படு சொல்லே கிளத்தல் வேண்டா 
வெளிப்பட வாரா உரிச்சொல் மேன.

அவைதாம், 
உறு தவ நனி என வரூஉம் மூன்றும் 
மிகுதி செய்யும் பொருள என்ப.

உரு உட்கு ஆகும் புரை உயர்பு ஆகும்.

குருவும் கெழுவும் நிறன் ஆகும்மே.

சல்லல் இன்னல் இன்னாமையே.

மல்லல் வளனே.

ஏ பெற்று ஆகும்.

உகப்பே உயர்தல் உவப்பே உவகை.

பயப்பே பயனாம்.

10 

பசப்பு நிறனாகும்.

11 

இயைபே புணர்ச்சி.

12 

இசைப்பு இசையாகும்.

13 

அலமரல் தெருமரல் ஆயிரண்டும் சுழற்சி.

14 

மழவும் குழவும் இளமைப் பொருள.

15 

சீர்த்தி மிகுபுகழ்.

16 

மாலை இயல்பே.

17 

கூர்ப்பும் கழிவும் உள்ளது சிறக்கும்.

18 

கதழ்வும் துனைவும் விரைவின் பொருள.

19 

அதிர்வும் விதிர்ப்பும் நடுக்கம் செய்யும்.

20 

வார்தல் போகல் ஒழுகல் மூன்றும் 
நேர்பும் நெடுமையும் செய்யும் பொருள.

21 

தீர்தலும் தீர்த்தலும் விடற்பொருட்டு ஆகும்.

22 

கெடவரல் பண்ணை ஆயிரண்டும் விளையாட்டு.

23 

தடவும் கயவும் நளியும் பெருமை.

24 

அவற்றுள், 
தடஎன் கிளவி கோட்டமும் செய்யும்.

25 

கயஎன் கிளவி மென்மையும் செய்யும்.

26 

நளிஎன் கிளவி செறிவும் ஆகும்.

27 

பழுது பயம் இன்றே.

28 

சாயல் மென்மை.

29 

முழுது என்கிளவி எஞ்சாப் பொருட்டே.

30 

வம்பு நிலை இன்மை.

31 

மாதர் காதல்.

32 

நம்பும் மேவும் நசை ஆகும்மே.

33 

ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய் 
ஆவயின் நான்கும் உள்ளதன் நுணுக்கம்.

34 

புலம்பே தனிமை.

35 

துவன்று நிறைவாகும்.

36 

முரஞ்சல் முதிர்வே.

37 

வெம்மை வேண்டல்.

38 

பொற்பே பொலிவு.

39 

வறிது சிறிது ஆகும்.

40 

எற்றம் நினைவும் துணிவும் ஆகும்.

41 

பிணையும் பேணும் பெட்பின் பொருள.

42 

பணையே பிழைத்தல் பெருப்பும் ஆகும்.

43 

படரே உள்ளல் செலவும் ஆகும்.

44 

பையுளும் சிறுமையும் நோயின் பொருள.

45 

எய்யாமையே அறியாமையே.

46 

நன்று பெரிது ஆகும்.

47 

தாவே வலியும் வருத்தமும் ஆகும்

48 

தெவுக் கொளல் பொருட்டே.

49 

தெவ்வுப் பகை ஆகும்.

50 

விறப்பும் உறப்பும் வெறுப்பும் செறிவே.

51 

அவற்றுள், 
விறப்பே வெரூஉப் பொருட்டும் ஆகும்.

52 

கம்பலை சும்மை கலியே அழுங்கல் 
என்றிவை நான்கும் அரவப் பொருள.

53 

அவற்றுள், 
அழுங்கல் இரக்கமும் கேடும் ஆகும்.

54 

கழும் என்கிளவி மயக்கம் செய்யும்.

55 

செழுமை வளனும் கொழுப்பும் ஆகும்.

56 

விழுமம் சீர்மையும் சிறப்பும் இடும்பையும்.

57 

கருவி தொகுதி.

58 

கமம் நிறைந்து இயலும்.

59 

அரியே ஐம்மை.

60 

கவவு அகத்திடுமே.

61 

துவைத்தலும் சிலைத்தலும் இயம்பலும் இரங்கலும் 
இசைப்பொருட் கிளவி என்மனார் புலவர்.

62 

அவற்றுள், 
இரங்கல் கழிந்த பொருட்டும் ஆகும்.

63 

இலம்பாடு ஒற்கம் ஆயிரண்டும் வறுமை.

64 

ஞெமிர்தலும் பாய்தலும் பரத்தல் பொருள.

65 

கவர்வு விருப்பு ஆகும்.

66 

சேரே திரட்சி.

67 

வியல்என் கிளவி அகலப் பொருட்டே.

68 

பேம் நாம் உரும் என வரூஉம் கிளவி 
ஆமுறை மூன்றும் அச்சப் பொருள.

69 

வய வலி ஆகும்.

70 

வாள் ஒளி ஆகும்.

71 

துயவு என்கிளவி அறிவின் திரிபே.

72 

உயாவே உயங்கல்.

73 

உசாவே சூழ்ச்சி.

74 

வயா என்கிளவி வேட்கைப் பெருக்கம்.

75 

கறுப்பும் சிவப்பும் வெகுளிப் பொருள.

76 

நிறத்துரு உணர்த்தற்கும் உரிய என்ப.

77 

நொசிவும் நுழைவும் நுணங்கும் நுண்மை.

78 

புனிறு என்கிளவி ஈன்று அணிமைப் பொருட்டே.

79 

நனவே களனும் அகலமும் செய்யும்.

80 

மதவே மடனும் வலியும் ஆகும்.

81 

மிகுதியும் வனப்பும் ஆகலும் உரித்தே.

82 

புதிது படற்பொருட்டே யாணர்க் கிளவி.

83 

அமர்தல் மேவல்.

84 

யாணுக் கவினாம்.

85 

பரவும் பழிச்சும் வழுத்தின் பொருள.

86 

கடி என் கிளவி 
வரைவே கூர்மை காப்பே புதுமை 
விரைவே விளக்கம் மிகுதி சிறப்பே 
அச்சம் முன்தேற்று ஆயீர் ஐந்தும் 
மெய்ப்படத் தோன்றும் பொருட்டு ஆகும்மே.

87 

ஐயமும் கரிப்பும் ஆகலும் உரித்தே.

88 

ஐ வியப்பு ஆகும்.

89 

முனைவு முனிவு ஆகும்.

90 

வையே கூர்மை.

91 

எறுழ் வலி ஆகும்.

92 

மெய்பெறக் கிளந்த உரிச்சொல் எல்லாம் 
முன்னும் பின்னும் வருபவை நாடி 
ஒத்த மொழியான் புணர்த்தனர் உணர்த்தல் 
தத்தம் மரபின் தோன்றுமன் பொருளே.

93 

கூறிய கிளவிப் பொருள்நிலை அல்ல 
வேறுபிற தோன்றினும் அவற்றொடு கொளலே.

94 

பொருட்குப் பொருள் தெரியின் அதுவரம்பின்றே

95 

பொருட்குத் திரிபு இல்லை உணர்த்த வல்லின்.

96 

உணர்ச்சி வாயில் உணர்வோர் வலித்தே.

97 

மொழிப்பொருள் காரணம் விழிப்பத் தோன்றா.

98 

எழுத்துப் பிரிந்து இசைத்தல் இவண் இயல்பின்றே

99 

அன்ன பிறவும் கிளந்த அல்ல 
பல்முறை யானும் பரந்தன வரூஉம் 
உரிச்சொல் எல்லாம் பொருட்குறை கூட்ட 
இயன்ற மருங்கின் இனைத்தென அறியும் 
வரம்பு தமக்கு இன்மையின் வழிநனி கடைப்பிடித்து 
ஓம்படை ஆணையின் கிளந்தவற்று இயலான் 
பாங்குற உணர்தல் என்மனார் புலவர்.

100 

9. எச்சவியல்

இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொல் என்று 
அனைத்தே செய்யுள் ஈட்டச் சொல்லே.

அவற்றுள், 
இயற்சொல் தாமே 
செந்தமிழ் நிலத்து வழக்கொடு சிவணி 
தம்பொருள் வழாமை இசைக்கும் சொல்லே.

ஒருபொருள் குறித்த வேறுசொல் ஆகியும் 
வேறுபொருள் குறித்த ஒருசொல் ஆகியும் 
இருபாற்று என்ப திரிசொல் கிளவி.

செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும் 
தம்குறிப் பினவே திசைச்சொல் கிளவி.

வடசொல் கிளவி வடஎழுத்து ஒரீஇ 
எழுத்தொடு புணர்ந்த சொல் ஆகும்மே.

சிதைந்தன வரினும் இயைந்தன வரையார்.

அந்நாற் சொல்லும் தொடுக்கும் காலை 
வலிக்கும்வழி வலித்தலும் மெலிக்கும்வழி மெலித்தலும் 
விரிக்கும்வழி விரித்தலும் தொகுக்கும்வழித் தொகுத்தலும் 
நீட்டும்வழி நீட்டலும் குறுக்கும்வழிக் குறுக்கலும் 
நாட்டல் வலிய என்மனார் புலவர்.

நிரல்நிறை சுண்ணம் அடிமறி மொழிமாற்று 
அவை நான்கு என்ப மொழிபுணர் இயல்பே.

அவற்றுள், 
நிரல்நிறை தானே 
வினையினும் பெயரினும் நினையத் தோன்றி 
சொல்வேறு நிலைஇ பொருள்வேறு நிலையல்.

சுண்ணம்தானே 
பட்டாங்கு அமைந்த ஈர்அடி எண்சீர் 
ஒட்டுவழி அறிந்து துணித்தனர் இயற்றல்.

10 

அடிமறிச் செய்தி அடிநிலை திரிந்து 
சீர்நிலை திரியாது தடுமா றும்மே.

11 

பொருள்தெரி மருங்கின் 
ஈற்றடி இறுசீர் எருத்துவயின் திரியும் 
தோற்றமும் வரையார் அடிமறி யான.

12 

மொழிமாற்று இயற்கை 
சொல்நிலை மாற்றி பொருள்எதிர் இயைய 
முன்னும் பின்னும் கொள்வழிக் கொளாஅல்.

13 

த ந நு எ எனும் அவை முதலாகிய 
கிளைநுதல் பெயரும் பிரிப்பப் பிரியா.

14 

இசைநிறை அசைநிலை பொருளொடு புணர்தல் என்று 
அவைமூன்று என்ப ஒருசொல் அடுக்கே.

15 

வேற்றுமைத் தொகையே உவமத் தொகையே 
வினையின் தொகையே பண்பின் தொகையே 
உம்மைத் தொகையே அன்மொழித் தொகைஎன்று 
அவ்ஆறு என்ப தொகைமொழி நிலையே.

16 

அவற்றுள், 
வேற்றுமைத் தொகையே வேற்றுமை இயல.

17 

உவமத் தொகையே உவம இயல.

18 

வினையின் தொகுதி காலத்து இயலும்.

19 

வண்ணத்தின் வடிவின் அளவின் சுவையின் என்று 
அன்ன பிறவும் அதன்குணம் நுதலி 
இன்னது இதுஎன வரூஉம் இயற்கை 
என்ன கிளவியும் பண்பின் தொகையே.

20 

இருபெயர் பலபெயர் அளவின் பெயரே 
எண்ணியற் பெயரே நிறைப்பெயர்க் கிளவி 
எண்ணின் பெயரொடு அவ்அறு கிளவியும் 
கண்ணிய நிலைத்தே உம்மைத் தொகையே.

21 

பண்புதொக வரூஉம் கிளவி யானும் 
உம்மை தொக்க பெயர்வயி னானும் 
வேற்றுமை தொக்க பெயர்வயி னானும் 
ஈற்று நின்று இயலும் அன்மொழித் தொகையே.

22 

அவைதாம், 
முன்மொழி நிலையலும் பின்மொழி நிலையலும் 
இருமொழி மேலும் ஒருங்குடன் நிலையலும் 
அம்மொழி நிலையாது அல்மொழி நிலையலும் 
அந்நான்கு என்ப பொருள்நிலை மரபே.

23 

எல்லாத் தொகையும் ஒருசொல் நடைய.

24 

உயர்திணை மருங்கின் உம்மைத் தொகையே 
பலர்சொல் நடைத்தென மொழிமனார் புலவர்.

25 

வாரா மரபின வரக் கூறுதலும் 
என்னா மரபின எனக் கூறுதலும் 
அன்னவை எல்லாம் அவற்றவற்று இயல்பான் 
இன்ன என்னும் குறிப்புரை ஆகும்.

26 

இசைப்படு பொருளே நான்கு வரம்பாகும்.

27 

விரைசொல் அடுக்கே மூன்று வரம்பாகும்.

28 

கண்டீர் என்றா கொண்டீர் என்றா 
சென்றது என்றா போயிற்று என்றா 
அன்றி அனைத்தும் வினாவொடு சிவணி 
நின்றவழி அசைக்கும் கிளவி என்ப.

29 

கேட்டை என்றா நின்றை என்றா 
காத்தை என்றா கண்டை என்றா 
அன்றி அனைத்தும் முன்னிலை அல்வழி 
முன்னுறக் கிளந்த இயல்பு ஆகும்மே.

30 

இறப்பின் நிகழ்வின் எதிர்வின் என்ற 
சிறப்புடை மரபின் அம்முக் காலமும் 
தன்மை முன்னிலை படர்க்கை என்னும் 
அம்மூ இடத்தான் வினையினும் குறிப்பினும் 
மெய்ம்மை யானும் இவ்விரண்டு ஆகும் 
அவ்ஆறு என்ப முற்றியல் மொழியே.

31 

எவ்வயின் வினையும் அவ்வியல் நிலையும்.

32 

அவைதாம், 
தத்தம் கிளவி அடுக்குந வரினும் 
எத்திறத் தானும் பெயர் முடிபினவே.

33 

பிரிநிலை வினையே பெயரே ஒழியிசை 
எதிர்மறை உம்மை எனவே சொல்லே 
குறிப்பே இசையே ஆயீர் ஐந்தும் 
நெறிப்படத் தோன்றும் எஞ்சுபொருட் கிளவி.

34 

அவற்றுள், 
பிரிநிலை எச்சம் பிரிநிலை முடிபின.

35 

வினையெஞ்சு கிளவிக்கு வினையும் குறிப்பும் 
நினையத் தோன்றிய முடிபு ஆகும்மே 
ஆவயின் குறிப்பே ஆக்கமொடு வருமே.

36 

பெயரெஞ்சு கிளவி பெயரொடு முடிமே.

37 

ஒழியிசை எச்சம் ஒழியிசை முடிபின.

38 

எதிர்மறை எச்சம் எதிர்மறை முடிபின.

39 

உம்மை எச்சம் இருஈற் றானும் 
தன்வினை ஒன்றிய முடிபு ஆகும்மே.

40 

தன்மேல் செஞ்சொல் வரூஉம் காலை 
நிகழும் காலமொடு வாராக் காலமும் 
இறந்த காலமொடு வாராக் காலமும் 
மயங்குதல் வரையார் முறைநிலை யான.

41 

எனவென் எச்சம் வினையொடு முடிமே.

42 

எஞ்சிய மூன்றும் மேல்வந்து முடிக்கும் 
எஞ்சு பொருட்கிளவி இலவென மொழிப.

43 

அவைதாம், 
தத்தம் குறிப்பின் எச்சம் செப்பும்.

44 

சொல்என் எச்சம் முன்னும் பின்னும் 
சொல்அளவு அல்லது எஞ்சுதல் இன்றே.

45 

அவையல் கிளவி மறைத்தனர் கிளத்தல்.

46 

மறைக்கும் காலை மரீஇயது ஒராஅல்.

47 

ஈ தா கொடு எனக் கிளக்கும் மூன்றும் 
இரவின் கிளவி ஆகிடன் உடைய.

48 

அவற்றுள், 
ஈ என் கிளவி இழிந்தோன் கூற்றே.

49 

தா என்கிளவி ஒப்போன் கூற்றே.

50 

கொடு என்கிளவி உயர்ந்தோன் கூற்றே.

51 

கொடு என்கிளவி படர்க்கை ஆயினும் 
தன்னைப் பிறன்போல் கூறும் குறிப்பின் 
தன்னிடத்து இயலும் என்மனார் புலவர்.

52 

பெயர்நிலைக் கிளவியின் ஆஅகுநவும் 
திசைநிலை கிளவியின் ஆஅகுநவும் 
தொல்நெறி மொழிவயின் ஆஅகுநவும் 
மெய்ந்நிலை மயக்கின் ஆஅகுநவும் 
மந்திரப் பொருள்வயின் ஆஅகுநவும் 
அன்றி அனைத்தும் கடப்பாடு இலவே.

53 

செய்யாய் என்னும் முன்னிலை வினைச்சொல் 
செய்என் கிளவி ஆகிடன் உடைத்தே.

54 

முன்னிலை முன்னர் ஈயும் ஏயும் 
அந்நிலை மரபின் மெய்ஊர்ந்து வருமே.

55 

கடிசொல் இல்லை காலத்துப் படினே.

56 

குறைச்சொற் கிளவி குறைக்கும் வழிஅறிதல்.

57 

குறைத்தன ஆயினும் நிறைப்பெயர் இயல.

58 

இடைச்சொல் எல்லாம் வேற்றுமைச் சொல்லே.

59 

உரிச்சொல் மருங்கினும் உரியவை உரிய.

60 

வினையெஞ் சுகிளவியும் வேறுபல் குறிய.

61 

உரையிடத்து இயலும் உடனிலை அறிதல்.

62 

முன்னத்தின் உணரும் கிளவியும் உளவே 
இன்ன என்னும் சொல்முறை யான.

63 

ஒருபொருள் இருசொல் பிரிவில வரையார்.

64 

ஒருமை சுட்டிய பெயர் நிலைக் கிளவி 
பன்மைக்கு ஆகும் இடனுமார் உண்டே.

65 

முன்னிலை சுட்டிய ஒருமைக் கிளவி 
பன்மையொடு முடியினும் வரைநிலை இன்றே 
ஆற்றுப்படை மருங்கின் போற்றல் வேண்டும்.

66 

செய்யுள் மருங்கினும் வழக்கியல் மருங்கினும் 
மெய்பெறக் கிளந்த கிளவி எல்லாம் 
பல்வேறு செய்தியின் நூல்நெறி பிழையாது 
சொல்வரைந்து அறியப் பிரித்தனர் காட்டல்.

67 

காணொளி

நிகழ்வுகள்