உலகத் தொல்காப்பிய மன்றம்
அமெரிக்கா (வாசிங்டன்) சிறப்புச் சொற்பொழிவு!

மன்ற முகப்பு

வணக்கம்!

தமிழில் கிடைத்துள்ள முதல் இலக்கண நூல் தொல்காப்பியம் ஆகும். இதனை உலக அளவில் பரப்பும் அமைப்பு உலகத் தொல்காப்பிய மன்றம் ஆகும். இந்த அமைப்பு பிரான்சில் தொடங்கப்பட்டு, கனடா, மலேசியா, சப்பான் நாடுகளில் கிளைகளைக் கொண்டு செயல்படுகின்றது. இந்த அமைப்பின் கிளை அமெரிக்கா நாட்டில், நியூசெர்சி மாநிலத்தில் உள்ள பிசுகாட்டவேயில் (Piscataway) 16.06.2018 சனி(காரி)க் கிழமை காலை 10:30 மணிக்கு, கயிலைப் புனிதர் மருதாசல அடிகளார் (பேரூராதினம், தமிழ்நாடு) அவர்களின் அருள் வாழ்த்துடன் தொடங்கப்பட்டது.

அமெரிக்காவில் உலகத் தொல்காப்பிய மன்ற வளர்ச்சி நோக்குடன், வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கம் நிகழ்ச்சியில் தொல்காப்பியம் பற்றியசிறப்புப் பொழிவு! வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் 17.06.2018 (ஞாயிறு) பிற்பகல் 2 மணியளவில் முனைவர் மு.இளங்கோவன் அவர்கள் தொல்காப்பியம் ஓர் அறிமுகம் என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார். வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் இராசாராம் சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற விழாவினை வலைத்தமிழ் நிறுவுநர் பார்த்தசாரதி அவர்கள் தொகுத்து வழங்கினார். பேராசிரியர் அரசு. செல்லையா சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்துவைத்தார். திருவாளர்கள் சுந்தர் குப்புசாமி, நாஞ்சில் பீட்டர், முத்துவேல் செல்லையா, கொழந்தவேல் இராமசாமி, சொர்ணம் சங்கரபாண்டி, மருத்துவர் சித்தானந்தம், முனைவர் குணா, அகத்தியன், சுந்தர் சொக்கலிங்கம் உள்ளிட்ட தமிழ்ச்சங்கத்தின் உறுப்பினர்கள் நிற்வாகிகள், பொறுப்பாளர்கள், தமிழார்வலர்கள் திரளாகக் கலந்துகொண்டனர். நியூசெர்சியிலிருந்து உலகத் தொல்காப்பிய மன்றத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் முனைவர் நா.க. நிதி அவர்கள் வருகைதந்திருந்தார். முனைவர் மு.இளங்கோவன் தொல்காப்பிய நூலினை அறிமுகம் செய்து உரையாற்றியதுடன் உலகத் தொல்காப்பிய மன்றத்தின் பணிகளையும் நினைவுகூர்ந்தார். சிறப்புரைக்குப் பிறகு பார்வையாளர்கள் வினவிய வினாக்களுக்கு விடை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் எழுத்தாளர் பவளசங்கரி, மணிமேகலை பிரசுரத்தின் திரு. இரவி தமிழ்வாணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு உரையாற்றினர்.